நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது ஷாகுல் பாதுஷாவின் சமாதி, நாகூரில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் 463- வது ஆண்டு கந்தூரி விழா, கடந்த 26- ந்தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவம் இன்று (05/02/2020) அதிகாலை நடைபெற்றது.
முன்னதாக நாகப்பட்டினம் நகரில் இருந்து தாவூத் எனப்படும் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு (04/02/2020) தொடங்கியது. தாரை, தப்பட்டை, பேண்டு வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சந்தனக் கூடு எடுத்துவரப்பட்டது. அதில் இருந்த சந்தன குடத்திற்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்லாமியர்கள் திரண்டு வந்து சந்தனகூடு மீது பூக்கள் தூவியும், பல்வேறு வடிவில் வந்த மினராக்களையும் கண்டு மகிழ்ந்தனர். அதிகாலை 04.00 மணிக்கு நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனக்கூடு வந்தடைந்தது. அங்கு ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் கந்தூரி விழாவுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் நாகை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.