சுப. முத்துக்குமார் என்பவர் மதுரை பக்கத்தைச் சேர்ந்தவர். இவர் சிறுவயதிலேயே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்து தங்கியிருந்தார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கியபோது தமிழ்நாடு முழுவதும் சென்று எண்ணற்ற இளைஞர்களைக் கட்சியில் இணைத்தவர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். சீமான் எங்கே பொதுக்கூட்டம் நடத்தினாலும், சில நாட்களுக்கு முன்பே சென்று பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துவருவார். இப்படி நாம் தமிழர் கட்சிக்காக தொடர்ந்து பாடுபட்டவர். திருமணமாகி சில மாதங்களில், கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தஞ்சைக்குச் சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அடுத்த சில நாட்களில், புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள ஒரு பழக்கடையில் பழம் வாங்கச் சென்றபோது அங்கு தயாராக காத்திருந்த ஒரு கும்பல் முத்துக்குமாரை சரமாரியாக வெட்டியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்ட தகவலறிந்து சீமான் வந்து அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்துக் கதறி அழுதார். வடகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, கொலையாளிகளை விரைவாக பிடிக்க வேண்டும்; முத்துக்குமார் கொல்லப்பட்ட இடத்தில் நினைவு இல்லம் அமைக்கப்படும் என்று சீமான் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக, முத்துக்குமாருக்கு நெருக்கமானவர்கள் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சாட்சிகளும் போடப்பட்டன. ஆனால் சாட்சிகள் சரியாக இல்லை. குற்றப்பத்திரிகையிலும் குளறுபடி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த நான்கு மாதங்களாக தீர்ப்பு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டதால், கடுமையான தண்டனை இருக்கும் என்று முத்துக்குமாரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர் .
இந்நிலையில், நேற்று முன்தினம் (18/08/2021) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் கொலை செய்யவில்லை என்றால், முத்துக்குமாரை கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
“முத்துக்குமார் உயிரோடு இருக்கும்வரை கட்சி பயன்படுத்திக்கொண்டது. அவர் கொல்லப்பட்ட பிறகு கண்டுக்கல. அதனால முத்துக்குமாருக்காக கட்சியில் இணைந்தவர்கள் கட்சியைவிட்டு வெளியேறினார்கள். பலர் அமைதியாகவே உள்ளனர். முத்துக்குமாருக்காக ஒரு நினைவுச் சின்னம் கூட இல்லாமல் போனது. அவரது குடும்பத்தில் எஞ்சியிருந்த அவரது சகோதரி கூட இப்ப உயிரோட இல்லை. முத்துக்குமார் கொலைக்கு நீதியும் கிடைக்கவில்லை” என்கிறார்கள் முத்துக்குமார் பாசறை தம்பிகள். நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.