போடி அருகே உள்ள பரமசிவன் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள புது காலனியில் வசிப்பவர்கள் பூமிநாதன், பரமேஸ்வரன், பாலசுப்பிரமணியம், சந்திரன் மற்றும் நரேந்திரநாத். இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தை சுப்புராஜ் நகரைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் பாலு கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார். கடந்த 27 ஆண்டுகளாக தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து வாழை மரங்கள், தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பாலு பயிரிட்டு விவசாயம் செய்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் திடீரென்று தோட்டத்துக்குள் புகுந்து 4,500 வாழை மரங்களை வெட்டி சாய்த்துவிட்டு ஓடிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாலு, போடி நகர் காவல் நிலையத்திலும் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடமும் புகார் மனு அளித்தார். மேலும் அந்த மனுவில், மீதமுள்ள 3,500 வாழை மரங்களையும் வெட்டிவிடுவார்கள். அதனால் எங்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது என மனு அளித்துள்ளார். மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் முரளிதரன், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கும் பரிந்துரை செய்துள்ளார். இச்சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.