முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல…….செயல் என்கிற தலைப்பில் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் எழுதிய புத்தகத்தை தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் வாங்கி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி வருகிறார்கள். அப்படியென்ன இருக்கிறது இந்த நூலில், தமிழ்நாடு முதல்வராகியுள்ள மு.க.ஸ்டாலினைக் கடந்த மே மாதத்துக்கு முன்பு வரை கடுமையாக அரசியல் ரீதியாக விமர்சனம் செய்து வந்தனர். சில அமைப்புகள் தனிப்பட்ட ரீதியிலும் அவரை விமர்சனம் செய்து வந்தனர்.
அவர் ஆட்சிக்கு வர முடியாது, வந்தாலும் பேரறிஞர் அண்ணாவைப் போல், கலைஞர் போல் செயல்பட மாட்டார். அவர் மனைவி பக்திமான், அதனால் இவரும் மறைமுகமாக ஆன்மீகவாதிகளுக்குச் சாதகமாக நடந்து கொள்வார். ஒன்றியத்தில் உள்ள ஆட்சியாளர்களுடன் சமரசமாகி விடுவார், தேர்தலுக்குப் பின்பு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வார், திமுக கொள்கைகளை, திராவிடக் கொள்கைகளைப் புறந்தள்ளி விடுவார் எனப் பலவாறு விமர்சனம் செய்தார்கள். செல்ப் எடுக்காத செயல் தலைவர் என்றெல்லாம் விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி தருகிறது இந்தநூல்.
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து திமுக பிரபலங்கள் கூட இவ்வளவு நுணுக்கமாக அவரை ஆய்வு செய்து இருப்பார்களா என்பது தெரியாது. அவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர். அவரை மட்டுமல்ல மக்கள் மனங்களையும் நூலாசிரியர் படித்துவருகிறார். காரணம் புத்தகத்தின் உள்ளே முதல் தலைப்பு “இத்தனை நாளாய் எங்கிருந்தார்?” என்பதே. கடந்த 100 நாட்களைக் கடந்த தமிழக முதல்வர் ஸ்டாலினின் சட்டமன்ற அறிவிப்புகளைக் கேட்கும், பார்க்கும், படிக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் இப்படித்தான் கேட்டுக்கொள்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக அண்ணா மறைந்த போது உன் இதயத்தை இரவலாகத் தந்திடு அண்ணா என்கிற கவிதைக்கு ஏற்ப அண்ணா அருகில் அவரை அடக்கம் செய்ததற்காக உழைத்த உழைப்பும், விட்ட கண்ணீர் குறித்தும், ‘தந்தையின் இலக்கியத்தை வரலாறாக்கிய மகன்’ என எழுதிய கட்டுரையாகட்டும், எதிர்கட்சித் தலைவராக இருந்தபோதும், அதற்கு முன்பும் தன்னை அவமானப்படுத்திய மறைந்த ஜெயலலிதாவை மக்கள் நலனுக்காகச் சந்தித்த நிகழ்வை ‘அவமதித்தோருக்கும் வெகுமதி தந்தவர்’ என்கிற தலைப்பில் எழுதிய பத்தியும், இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கலைஞர் கைது குறித்த, ‘அந்த நள்ளிரவுக் கைது’ கட்டுரையும், இந்தியாவின் புகழ்பெற்ற மாநகரங்களில் ஒன்றான சென்னையை மாற்றிய விதம் குறித்து ‘சிங்காரச் சென்னையின் நாயகன்’ என்கிற தலைப்பிலும், அரசு நிர்வாகத்தில் அதிகாரிகளை ஒருங்கிணைத்து எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதை நேர்ந்த நிர்வாகியாக வெளிப்படுத்தும் ‘ஒருங்கிணைந்து செயலாற்றும் தலைமைப்பண்பு’ கட்டுரையும், சென்னை மாநகரத்தின் மேயர் என்கிற பதவியில் இரண்டாவது முறையாக மக்களால் தேர்வு செய்யப்பட்டதை முதலமைச்சராக இருந்த ஜெ தடுத்தது தொடர்பான ‘குரங்கு கை பூமாலையான ஜனநாயகம்’ என்கிற தலைப்பில் உள்ள பத்தியும், அவரே உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, நடந்த மாநகர மேயர் தேர்தலில் நடந்த கலாட்டாக்களை நீதிமன்றம் கடிந்து கொண்டபின் ஸ்டாலின் என்ன செய்தார் என்பதை ‘பதிலுக்குப் பதில்’ என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையும் வெளிப்படையானது.
உள்ளாட்சித் தேர்தலே சாதி வெறியால் நடத்த முடியாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி தேர்தலை நடத்திச் சாதித்தது குறித்து ‘சமத்துவப் பெருவிழா’ என்கிற தலைப்பிலும் சமத்துவபுரம் குறித்தும், அங்குப் பெரியார் சிலைகள் ஏன் முகப்பில் அமைக்கப்பட்டது என்பது குறித்த ‘ஒரே ரத்தம்’ என்கிற தலைப்பிலும், ஒரு போராளியின் பயணம் என்கிற சமத்துவபுர கட்டுரையும் அவரது நிர்வாகம் மற்றும் கொள்கை பயணத்திற்கான சான்று.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்தது, கடந்த ஆட்சியில் தமிழகத்தில் நூலகங்கள் சிதைக்கப்பட்டது குறித்து ‘கனவை நனவாக்கிய நூலகங்களின் கதி’ என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையாகட்டும், தனக்குப் பிடிக்கவில்லை அல்லது சகுனம் எனச்சொல்லி அகற்றப்பட்ட கண்ணகி சிலையை அன்பகத்தில் நிறுவியது தொடர்பான ‘இது ஸ்டாலின் ஸ்டைல்’ கட்டுரையும், கலைஞரின் மனதில் உள்ளதை முரசொலியே வெளிப்படுத்தும், நான் நினைப்பதை அப்படியே செய்து முடிப்பவர் ஸ்டாலின் எனப் பேசிய நிகழ்வு குறித்து ‘முரசொலியும் மனசொலியும்’ என்கிற தலைப்பில் எழுதியதாகட்டும், 2009 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி குறித்து எழுதிய தேர்தல் களத்தில் ‘பாஸ் மார்க்’ கட்டுரையும், 2011ல் எதிர்கட்சியாகக் கூட வரமுடியாத தோல்வியைச் சந்தித்தபோது, பலரும் திமுக அவ்வளவுதான் என எக்காளமிட்ட நேரத்தில் நில அபகரிப்புச் சட்டம் என்கிற பெயரில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டபோது, 1 லட்சம் பேரைத் திரட்டி போராட்டம் செய்த நிகழ்வை வெளிப்படுத்தும் ‘சிறை நிரப்பும் போராட்டத்தின் தளபதி’ செய்தியாகட்டும், கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்தபோது நடந்தவற்றை, ‘கூட்டமா? கொள்கையா?’ என அண்ணாவின் வழியை கடைப்பிடித்ததை சொல்லிய கட்டுரையும், அன்பகம் உருவாக்கம் குறித்த ‘கொடி மட்டுமல்ல…….. அது குருதியோட்டம்’ கட்டுரையும், திமுகவின் கொடிக்குறித்து சேலத்தில் 2004ல் நடைபெற்ற திமுக மாநாட்டில் பேசிய பேச்சு குறித்து ‘உயிர் வண்ணமான இரு வண்ணம்’ என்கிற தலைப்பிலான செய்தியும், 1996, 1997ல் திமுக மாநாட்டின் இளைஞரணி செய்த ஊர்வலச் சாதனையை ‘ஊர்வலத்தைப் பேரணியாக்கிய இளைஞரணி’ என்கிற வரலாற்றுச் செய்தியை விவரித்த விதம் அருமை.
சட்டமன்றத்தில் கலைஞர், பேராசிரியர் பேச்சுக்களைக் கவனிப்பதும், பொருளாதார ஆலோசனைக்குழு அமைத்ததுக் குறித்த தகவலைச் சொல்லும் ‘சொல்லுக்கேற்ற செயல்’ தலைப்பிலான கட்டுரையும், இளைஞரணி தொடக்கம் குறித்தும், அப்போது தீவிரமாகச் செயல்பட்டவர்கள், அதன் செயல்பாடுகள் குறித்த ‘இளைஞர் அணியும் இதர அணிகளும்’ கட்டுரையும், காலமாற்றத்துக்கும், தகவல் தொழில்நுட்ப காலகத்தில் அதன் சவால்களைச் சந்திக்க உருவாக்கப்பட்ட அணிகள் குறித்த ‘புதிய அணிகள் – புத்துயிர்ப்பு செயல்கள்’ என்கிற செய்தியும், மக்களிடம் கழகத்துக்கு இடைவெளி குறைவதால் கட்சியினரை மக்களிடம் செல் எனச்சொல்லி நமக்கு நாமே சென்ற பயணம் குறித்தும், அந்த பயணத்தில் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்த நிகழ்வை ‘பாலமாக மாறிய பயணம்’ குறித்து எழுதியதும், அந்த உழைப்பே 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வரலாற்றில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறாகப் பெரிய மெஜாரிட்டியாக எதிர்கட்சியாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமர்ந்தது குறித்த, ‘தோல்வியே வெற்றிக்கு ( கசப்பு ) மருந்து’ என்கிற தலைப்பிலான கட்டுரையாகட்டும், தொடர்ச்சியாக இரண்டாவது முறை தோல்வியைச் சந்தித்தாலும் மக்களைச் சந்திக்காமல் இருந்ததில்லை என்பதை வெளிப்படுத்தும், ‘சளைக்காத பயணம் ஓயாத உழைப்பு’ கட்டுரைகள் இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தன்னம்பிக்கை செய்திகள்.
கலைஞர் இல்லாத திமுகவை வழிநடத்த முடியாது என ஸ்டாலின் குறித்து விமர்சனங்கள் வந்தபோது அவர் அதுகுறித்து பேசிய, ‘ஆட்ட நாயகன்’ என்கிற கட்டுரையும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணியை வெற்றி பெறவைத்த அவரின் உழைப்பு, திட்டமிடல் குறித்த, ‘தமிழகத்தைத் திரும்பிப் பார்த்த இந்தியா’ கட்டுரையும், மிசாவில் சிறை சித்திரவதை குறித்து கலைஞர், சிட்டிபாபு எழுதிய, ‘சிறையில் உருவான தலைவர்’ என்கிற தலைப்பிலான வரலாற்றுத் தகவல்கள் கொண்ட கட்டுரையும், கட்சிக்கு உள்ளேயும், வெளியேவும் தன்மீது வரும் விமர்சனங்களை ஆராய்ந்து தன்னை காலத்திற்கேற்ற மாற்றம் செய்து கொள்ளும் பண்பு குறித்தும், பி.கே டீம் நியமனம் குறித்து வாத பிரதிவாதங்கள் கட்சிக்குள்ளும், வெளியேவும் நடந்தபோதும், அதன் தேவை குறித்து எழுதப்பட்டுள்ள ‘உடைக்கப்பட்ட பொய் பிம்பங்கள்’ கட்டுரையும், ஒரே ரத்தம் திரைப்படத்தில் நடித்தது குறித்து எழுதப்பட்டுள்ள ‘தளபதிக்குள் ஒரு கலைஞர்’ என்கிற கட்டுரையும், முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றபோது அவரது துணைவி துர்கா ஸ்டாலின் கண்ணீர் குறித்த பின்னணி நிகழ்வை வெளிப்படுத்தும் ‘மாண்புமிகு முதலமைச்சர்’ கட்டுரை சிறப்பு.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான் எனச்சொல்லி உறுதிமொழி ஏற்றது ஏன் என விளக்கும் ‘கலைஞரின் தொடர்ச்சி’ என்கிற தலைப்பிலான கட்டுரையும், அதன் தொடர்ச்சியாக அனைத்து சாதி, மதங்களைக் கடந்த சமூகநீதி பயணத்தில் நடைபோடுவது குறித்து எழுதப்பட்டுள்ள ‘சமூக நீதியின் தொடர் ஓட்டம்’ என்கிற கட்டுரைகள் இந்த ஆட்சி எப்படி நடக்கும் என்பதை வெளிப்படுத்தும் கட்டுரை. இந்த நூல் வருங்காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து யாராவது ஆய்வு செய்தால் அவர்களுக்கான ஆவண வழிகாட்டியாக இருக்கும்.
திமுக என்கிற கட்சி, அதன் கொள்கை, அதன் செயல்பாடுகள், கலைஞர் உட்படத் திராவிட தலைவர்களின் செயல்பாடுகளை உள்வாங்கி எப்படி ஸ்டாலின் செயல்படுகிறார் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளது இந்தநூல் எனப் பலரும் இணையத்தில் எழுதிய விமர்சனத்தின் தொகுப்பே இந்த செய்தி.
முதலிலேயே சொன்னது போல் இது திமுகவினருக்கான நூல் மட்டுமல்ல பொதுமக்கள் குறிப்பாக இன்றைய இளைய சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டிய ஒருதலைவரின், இயக்கத்தின், திராவிடத்தின் வரலாற்று நூல் என்கிறார்கள் நூலை வாங்கிய தொண்டர்களுக்கு வழங்கிவரும் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) ஞானவேலன், கீழ்பென்னாத்தூர் ஒ.செ ஆராஞ்சி ஆறுமுகம், திருவண்ணாமலை மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி கார்த்திபழனி, கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.வி.ராஜ்குமார், திராவிட இயக்க ஆதரவாளரும், திராவிடத்துக்காக இணையத்தில் இயங்கும், பல புத்தகங்களை வாங்கி நண்பர்களுக்கு வழங்கிவரும் கண்ணையன் ராமமூர்த்தி போன்றோர். முதல்வர் ஸ்டாலினை அறிந்து கொள்ள உதவும் முக்கிய நூலிது என்கிறார்கள் புத்தகத்தைப் படித்துவிட்டு கருத்து கூறும் பலரும்.