
மங்கல இசைக்கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைப்பதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவு என, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தவில், நாதஸ்வரம் போன்ற மங்கல இசைக் கலைஞர்களுக்கு தனி வாரியம் ஏற்படுத்தி, நிவாரண உதவிகள் வழங்கக்கோரி, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை தொடர்ந்த வழக்கில், தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழக அரசு, கடந்த 2007-ம் ஆண்டு, நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மங்கல இசைக் கலைஞர்களை இணைத்து, தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தை அமைத்துள்ளது. மங்கல இசைக்கலையை அழியாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. கோவில்களிலும், சுவாமி ஊர்வலங்களிலும், தேர் திருவிழாக்களிலும், நாதஸ்வரம், தவிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா ஊரடங்கு காலத்தில், நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 35,385 உறுப்பினர்களில், 24,000-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 5 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் மூலம், உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தனியாக மங்கல இசைக் கலைஞர்களுக்கு வாரியம் அமைக்க வேண்டிய கேள்வி எழவில்லை. அது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, வரும் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.