தமிழ்நாட்டில் 525 பேரூராட்சிகள் உள்ளன. அதில் தற்போது 40 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதேவேளையில், கடந்த மாதம் 120க்கும் மேற்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், குறிப்பாக கோவை மண்டலத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் சிதறடிக்கப்பட்டனர்.
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த பேரூராட்சிகளின் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் என பட்டியல் எடுக்கப்பட்டு கடந்த 10 ஆண்டு காலத்தில் அவர்கள் சம்பாதித்த சொத்து விபரங்கள் சேர்க்கப்பட்டன. அதன்பின்னர், தற்போதைய நகர்புறத்துறை அமைச்சர் கே.என். நேரு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
தற்போது கோவை மண்டலத்தில் இருந்தும், பல்வேறு பகுதியில் இருந்தும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட வேலுமணிக்கு ஆதரவான சில பேரூராட்சி செயல் அலுவலர்கள், பிரச்சனை இல்லாமல் செல்வ செழிப்போடு இருக்கும் சில பேரூராட்சிகளைக் குறிவைத்து அங்கு பணியிடமாற்றம் வாங்குவதற்காக சில லட்சங்களை செலவிட தயாரென பேசிவருகின்றனர்.
குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வளமான பேரூராட்சிக்கு ரூ. 20 முதல் 30 லட்சம் வரை என ஏலம்விட்டதுபோல் கடும் போட்டி போட்டதாக தெரிகிறது. ஆனால், பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்கள் யாரையும் மீண்டும் மாற்றும் எண்ணம் இல்லை எனக் கூறும் பேரூராட்சி அதிகாரிகள் சிலர், நடக்கும் பேரத்தை மறுக்கவில்லை. இடமாற்றத்திற்கு நடக்கும் இந்த ஏலம் பற்றிய தகவல்ச, துறை அமைச்சருக்கு போய் சேர்ந்ததா என்பதும் இதுவரை தெரியவில்லை.