முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து அணைப் பகுதியில் டி.எஸ்.பி. தலைமையில் 20- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு- கேரளா எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் பயன் பாசன வசதிக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அணையின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் அறிக்கையை மூன்று பேர் கொண்ட குழுவிடம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அணையின் நீர்மட்டம் உயரும் போதும் பருவ மழைக் காலங்களிலும் ஐந்து பேர் கொண்ட குழு மற்றும் மூன்று பேர் கொண்ட குழு பெரியாறு அணையைப் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே அணையைக் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகத் திருவனந்தபுரம் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு செல்போன் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த அழைப்பு திருச்சூரிலிருந்து வந்தது என்றும், பொய்யான தகவல் என்றும் தெரிய வந்தது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில் கேரள காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஏற்கனவே, கேரளா காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தாலும் இந்த மிரட்டலைத் தொடர்ந்து டி.எஸ்.பி. நந்தன் பிள்ளை தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இருபதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்புப் பணி ஈடுபட்டு வருகின்றனர். இப்படி திடீரென உள்ள பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வந்த மிரட்டலைக் கண்டு கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.