Skip to main content

'அம்மா உயிர்த்தெழுவார்...' - உடல் மீது பைபிள் வைத்து ஜெபத்தில் ஈடுபட்ட மகள்கள்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Mother will be resurrected ... Daughters who put the Bible on the body and engaged in prayer

 

மணப்பாறை அருகேயுள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி. இவருக்கு திருமணமாகாத நிலையில் ஜெசிந்தா(43) மற்றும் ஜெயந்தி (40) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மேரி கடந்த சில நாட்களாக  உடல் நலம் குன்றி இருந்த நிலையில் அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேரி இறந்துவிட்டதையும் அவரது உடலை அடக்கம் செய்யாமல் மகள்கள் இருவரும் மீண்டும் உயிர் வந்து விடும் என பைபிளை சடலத்தின் மீது வைத்து ஜெபம் செய்து வந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் மேரியின் உடலை அடக்கம் செய்ய மகள்கள் இருவரிடமும் அறிவுறுத்தியிருக்கிறார்.

 

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மகள்கள் இருவரும் உறவினரை திட்டி வெளியே அனுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு மணப்பாறை உதவி ஆய்வாளர் சூர்யா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். நீண்ட நேரமாக போலீசார் கதவை தட்டியும் திறக்காத நிலையில் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்திருக்கின்றனர். உள்ளே சென்று பார்த்த போது, மேரியின் உடல் பாதி அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை மீட்க முயன்றனர். அப்போது மகள்கள் இருவரும் தனது தாய் இன்னும் உயிரோடு தான் இருப்பதாக கூறி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர்.

 

பின்னர் போலீசார் மகள்கள் இருவரிடமும் மேரியை மருத்துவமனைக்கு கொண்டு உயிரை காப்பாற்றிவிடலாம் என சமாதானப்படுத்த முயன்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதன் பின்பு உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மேரியின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து ஏழு நாட்கள் கழிந்தது எனவும் உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் கூறினார். மருத்துவர் கூறியதை ஏற்க மறுத்த மகள்கள் இருவரும் தாய் உயிருடன் வந்துவிடுவார் எனக் கூறி அங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே மகள்களிடம் இருந்து தாயாரின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.