திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பிறமாவட்ட மக்கள் மகா தீபத்தன்று திருவண்ணாமலை நகரில் வந்து குவிவார்கள். அன்றைய தினம் மட்டும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் 14 கி.மீ. சுற்றளவுள்ள மலையை, அண்ணாமலைக்கு அரோகரா என பாடியபடி கிரிவலம் வருவார்கள். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் 2663 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு ஏறி சிவன் பாதம் எனக் குறிப்பிடப்படும் பகுதியை வணங்கிவிட்டுவருவார்கள். அந்த மலை உச்சியில் தான் மாலை சரியாக 06.00 மணிக்கு தீபம் ஏற்றப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான நடைமுறை.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி கடந்தாண்டும், இந்த ஆண்டும் பக்தர்கள் கலந்துகொள்ளாத தீபத்திருவிழா நடைபெறுகிறது. தீபத்திருவிழாவின் சாதாரண திருவிழாக்களில் பக்தர்களை கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்த மாவட்ட நிர்வாகம் பரணி தீபம், மகா தீபம் காணத் தடை என அறிவித்தது. இதனை எதிர்த்து ஆன்மீக அமைப்பொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது, நவம்பர் 19 மற்றும் 20- ஆம் தேதி உள்ளூர் மக்கள் 5 ஆயிரம் பேர், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் என 20 ஆயிரம் பேர் கிரிவலத்துக்கு அனுமதிக்கிறோம் என்றது. அதனை ஏற்று உத்தரவாகவும் வெளியிட்டது நீதிமன்றம்.
கிரிவலம் வருபவர்கள் ஆதார் கார்டு, கரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் கிரிவலம் வரலாம், சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படும் என அறிவித்தார்கள். நவம்பர் 19- ஆம் தேதி விடியற்காலை கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது.
இந்த தகவல் செய்தியாகப் பரவியதும் காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினார்கள். நகரத்துக்குள் வரும் 9 சாலைகளிலும் காவல்துறையினர் நின்று சோதனை நடத்தி அனுப்பத் தொடங்கினார்கள். மதியத்துக்கு மேல் மழை பெய்வது நின்றதால், அதிகளவு பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். இதனால் பக்தர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடுமாறினர். அதனால் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டு இருந்தார்கள்.