திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தங்கி இருத்தல், கள்ளத் தோனியில் வெளிநாடு தப்பிச் செல்லுதல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, சூடான், பல்கேரியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 143 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.45 மணி முதல் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர்கள் அன்பு, ஸ்ரீதேவி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் 6 காவல்துறை உதவி ஆணையர்கள், 14 ஆய்வாளர்கள், 29 உதவி ஆய்வாளர்கள் 150க்கும் மேற்பட்ட போலீசார் என 300-க்கும் மேற்பட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குற்ற வழக்குகள், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளார்கள், வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டி உள்ளனரா, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட முயலுகின்றனரா, அவர்களிடம் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் உள்ளனவா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவர்களின் செல்போன்கள், லேப்டாப்புகள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உடனடியாக வழங்கக் கோரி சிறைவாசிகள் முகாமிற்குள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.