வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை விட்டுவிட்டு தொடர்ச்சியாகப் பல இடங்களில் மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ள நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சியில் உள்ள லட்சுமி நகர், பாலாஜி நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட ஆறு தெருக்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை பொழிந்தால் ஒவ்வொருமுறையும் நீர் சூழ்ந்துகொள்வது வாடிக்கையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மழைநீர் சூழ்ந்தால் அதனை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட வெளியே வர முடியாததால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர் காஞ்சிபுரம் கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள். அங்கு மட்டுமில்லாமல் அருகிலுள்ள கொளப்பாக்கம், ஐயப்பன் தாங்கல், மவுலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.