மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடர்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தப்படுவது வழக்கமான முறைகளில் ஒன்று. ஆனால் கரோனா காரணமாக இடையில் சில மாதங்கள் மின் கட்டணம் வசூல் செய்யப்படாமல் சில மாத இடைவெளிக்குப் பிறகு மொத்தமாக பணம் வசூல் செய்யப்பட்டது. இதனால் பலருக்கு மின்சார கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என்று அதிகரித்தது. இதனால் மின் நுகர்வோர் கடும் பாதிப்படைந்தனர். எதிர்க்கட்சிகளும் இதுதொடர்பாக போராட்டங்களை முன்னெடுத்தது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.