தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் பஜாரில் தேசிய மயமாக்கப்பட்ட முன்னணி வங்கி ஒன்றின் ஏ.டி.எம். ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் எப்போதும் பணம் குறைவாகவே வைப்பதால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பணமெடுக்கச் செல்லும்போதெல்லாம் பணமில்லாமல் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே நேற்றைய தினம் அந்த ஏ.டி.எம்-மிற்கு பணம் எடுக்க வந்த வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணமில்லாததால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் வெளியே இருந்த கல்லை எடுத்து வந்து ஏ.டி.எம். திரையின் கண்ணாடியை அடித்துச் சேதப்படுத்தியுள்ளார். இதையறிந்த வங்கி நிர்வாகத்தினர், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரத்துடன் கொண்டு சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து நாம் பேய்க்குளம் நகரின் சமூக ஆர்வலர்களிடம் கேட்ட போது, "இங்கே அந்த ஏ.டி.எம். ஒன்றுதான் உள்ளது அக்கம் பக்க கிராமத்தவர்கள் பணமெடுப்பதற்காக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்கள் அதிகமிருப்பதாலும். அதில் போதிய அளவு பணம் வைக்காமல் போனதாலும் பணமெடுக்கமுடியாமல் திரும்ப வேண்டிய சூழல். ஆனால் வங்கி நிர்வாகமோ நகரங்களைப் போல் இல்லாமல் கிராமப்புற ஏ.டி.எம்.களில் விதிப்படி பாதுகாப்பு கருதி ஓரளவுதான் வைக்கமுடியும். எனவே, இதற்கு வங்கி நிர்வாகம் தான் ஒரு தீர்வு காண வேண்டும்" என்கின்றனர்.