நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தி சிலம்பகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் செல்வக்குமார். இவர் உள்பட சிலர் மீது கடந்த 2020- ஆம் ஆண்டு, வேலகவுண்டம்பட்டி காவல்நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வழக்கு விசாரணை அறிக்கையில் செல்வக்குமார் உள்ளிட்ட கூட்டாளிகள் மூன்று பேரின் பெயர்களை சேர்க்காமல் இருக்க, சிறப்பு எஸ்.ஐ. சண்முகம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வக்குமார், இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினரின் ஆலோசனையின் பேரில், சனிக்கிழமை (டிச. 4) காலை 09.00 மணியளவில், மானத்தி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வைத்து எஸ்.எஸ்.ஐ. சண்முகத்திடம் லஞ்சம் கொடுத்துள்ளார் செல்வக்குமார்.
அப்போது அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், பாய்ந்து சென்று எஸ்.எஸ்.ஐ. சண்முகத்தை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.