கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது நைனார்பாளையம். அங்குள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்துவருபவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன் (36). இவர், தனது தந்தை பெயரில் இருந்த நிலத்தை தன் சகோதரர்கள் மூவருடன் பாகப்பிரிவினை செய்துகொண்டார். இதையடுத்து, மூவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் மூலம் பாகப்பிரிவினையைப் பதிவும் செய்துகொண்டனர். இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை பத்திரத்தின்படி நிலத்தை தங்கள் மூவரது பெயருக்கும் பட்டா மாற்றம் செய்து தருமாறு ஜெயராமனும் அவரது சகோதரர்களும் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர்.
ஆனால் முறைப்படி நிலத்தை அளவு செய்துகொடுக்க வேண்டிய நில அளவையர் யாரும் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வரவில்லை. அதனால் கடந்த 15ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று விவரம் கேட்டுள்ளார் ஜெயராமன். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் நில அளவையர் சூர்யா என்ற பெண்மணியைப் பாருங்கள் என்று கூறியுள்ளனர். அதன்படி சர்வேயர் சூர்யாவை சென்று பார்த்துள்ளார் ஜெயராமன். அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு இணைய வழியில் விண்ணப்பித்ததற்கான ரசீதையும் காட்டியுள்ளார்.
அதை எல்லாம் சரி பார்த்த சூர்யா, உங்கள் சகோதரர்கள் மூன்று பேரும் தலா 8000 ரூபாய் வீதம் மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் நிலத்தை அளவு செய்து பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார் சூர்யா. நில அளவை செய்து பட்டா மாற்றம் செய்ய இவ்வளவு தொகையா? என ஜெயராமன் கேட்டபோது, இந்தப் பணம் எனக்கு மட்டும் அல்ல. மற்ற அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சூர்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜெயராமன் அதற்கான பணத்தை ஏற்பாடு செய்துகொண்டு வருவதாகக் கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார். தங்களுக்குரிய நிலத்தைப் பட்டா மாற்றம் செய்துகொடுக்க வேண்டியது வருவாய்த்துறையினரின் கடமை. அப்படியிருக்கும்போது 24 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் தர வேண்டும் என கறாராக கேட்டதை ஜெயராமனாலும் அவரது சகோதரர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள காவல்துறை ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் சென்று புகார் அளித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி நேற்று (24.11.2021) மாலை 6 மணியளவில் சூர்யா மற்றும் அப்பகுதி கிராம உதவியாளர் சுசீலா ஆகியோரை ஜெயராமன் சந்தித்தார். அப்போது ரசாயன பவுடர் தடவிய பணத்தை ஜெயராமன் அவர்களிடம் கொடுத்தபோது, உடன் சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து நில அளவையர் சூர்யா, உதவியாளர் சுசீலா ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். பட்டா மாற்றம் செய்ய பெண் நில அளவையர், கிராம உதவியாளர் இருவரும் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.