சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், கடந்த இரண்டு மாதங்களாக கரோனா அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். கரோனவால் உலகம் மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. உலகப் போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மிக மன தைரியத்துடன் கரோனாவை எதிர்த்துப் போராடி வருகிறது. முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட தாக்கத்தை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கரோனா. வரும் சில வாரங்கள் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்கவேண்டும். கரோனா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு. அத்தியாவசிய நோக்கங்களுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். மக்கள் அலுவலகம் செல்வதை தவிர்த்து வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. கரோனாவுக்கு தடுப்பு மருந்தோ, முன்கூட்டியே அறியும் வசதியோ இதுவரை இல்லை. மக்கள் தனிமைப் படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்த அளவுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிக மிக அவசியம். மக்கள் விழிப்புணர்வோடு கரோனாவை எதிர்கொள்ளவேண்டும் அலட்சியம் கூடாது. நோய்க்கு ஆளாகாதீர்கள். நோய்தொற்றை யாருக்கும் பரப்பாதீர்கள். 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
22ம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று அத்தியாவசிய பணியில் ஈடுபடு வோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் குடிமக்களிடம் ஊரடங்கு என்றால் என்ன என்பது குறித்து விளக்க வேண்டும். தேவையின்றி மருத்துவமனைகளில் குவிந்து அச்சத்தை ஏற்படுத்த கூடாது. 22 ஆம் தேதி கரோனா வைரஸுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும். சிறு உடல் நலக்குறைவுகளுக்காக மருத்துவமனைகளில் பொதுமக்கள் குவிய வேண்டாம்.
முக்கிய அறுவை சிகிச்சைகள் ஏற்பாடு செய்திருந்தால் நேரத்தை ஒத்தி வைத்துக்கொள்வது நல்லது. கரோனாவோடு போராடிவரும் மருத்துவ சேவைக்கு மேலும் சுமையை அதிகரிக்கக் கூடாது. அச்சத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிப்பதை தவிர்க்க வேண்டும். மருந்து பொருட்கள் போன்றவற்றை பதுக்க வேண்டாம்.
பணிக்கு வர முடியாத ஊழியர்கள் ஊதியத்தை குறைக்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர் நோயிலிருந்து விடுபடவும், அவரது குடும்பத்திற்கு உதவி செய்யவும் வேண்டும். மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம். கரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அதை தவிர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையின் கீழ் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என உரையாற்றினார்.