குடிநீருக்கு வரும் நீரை தனியாக வெட்டி, திருட்டுத்தனமாக பாசனத்திற்கு பயன்படுத்தும் கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் பரபரப்பு புகார் கூறினார்.
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 24, 2018) நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வேளாண் துறையில் நடக்கும் முறைகேடுகள், விவசாயிகளின் தேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன.
ஆத்தூரைச் சேர்ந்த விவசாயி பெருமாள், ''தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கடும் வறட்சி காரணமாக ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. மேட்டூர் அணையில் இருந்து சரபங்கா நதி வழியாக இணைப்பு ஏற்படுத்துவதன் மூலம் ஆத்தூர் சுற்றுவட்டார விவசாய பாசனத்திற்கு உபரி நீரை பயன்படுத்த முடியும்.
இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை மனு கொடுத்துவிட்டோம். கடந்த மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நாளன்றும் முதல்வரிடமும் மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இனியும் காத்திருந்தால் விவசாயம் நடக்காது என்பதால் இம்முறை மடிப்பிச்சை கேட்டு வந்திருக்கிறோம்,'' என்று கூறியபடியே, சட்டையை மடியேந்துவதுபோல் ஏந்தியவாறு வந்து கலெக்டர் ரோகிணியிடம் கோரிக்கை மனு வழங்கினார். இதனால் அந்த அரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயி பெருமாளிடம் கேட்டபோது, ''இறைவன் அருளால் இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பிவிட்டது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கனஅடி உபரி நீராக கடலில் கலந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பயன் இல்லாமல் போகிறது.
மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வரும்போதெல்லாம் விவசாயத்திற்கு பயன்படும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேட்டூர் அணை நிரம்பியும் அதை முறையாக பயன்படுத்தாமல் போவதால் தண்ணீரின்றி ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் மூன்று லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதனால்தான் இன்று மடிப்பிச்சை கேட்டு வந்திருக்கிறோம். மாவட்ட நிர்வாகத்தால் முடியாது என்றால் அந்த திட்ட அரசாணையையாவது கொடுக்கட்டும். நாங்கள் டெல்லி சென்று மத்திய அரசிடமாவது அனுமதி பெறுகிறோம்.
கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்து, குடிநீருக்கு வரும் குழாயில் இருந்து திருட்டுத்தனமாக, அதிகார துஷ்பிரயோகம் செய்து தன்னுடைய சொந்த விவசாய நிலத்திற்கு தண்ணீரை பயன்படுத்தி வருகிறார். குடிக்கவே தண்ணீரின்றி தவித்து வரும் பொதுமக்களை கண்டுகொள்ளாமல், அதிகாரிகள் துணையுடன் சட்ட விரோதமாக செயல்படும் மருதமுத்து எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.