சேலம் பாமக எம்எல்ஏ அருள், கரோனா தடுப்பூசி, பூஸ்டர் ஊசிகள் செலுத்திக் கொண்ட பிறகும், இரண்டாவது முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருப்பவர் அருள் (50). பாமகவில் சேலம் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். முதல் அலை கரோனா தொற்று பரவியபோது இவரும் நோய்த்தொற்றுக்கு ஆளானார். சிகிச்சைக்குப் பிறகு கரோனாவில் இருந்து குணமடைந்து, வழக்கமான அரசியல் பணிகளைத் தொடர்ந்து வந்தார்.
இதையடுத்து அவர், கரோனா தடுப்பூசி, பூஸ்டர் ஊசிகளும் போட்டுக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர், மருத்துவர்களின் ஆலோசனையின்படி தன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தடுப்பூசி, பூஸ்டர் ஊசிகளும் செலுத்திக் கொண்ட பிறகும், இரண்டாவது முறையாக கரோனா தொற்றால் அருள் எம்எல்ஏ பாதிக்கப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.