மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களைக் கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அறவழியில் அயராது நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் விவசாய அமைப்புகள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களங்களிலும் மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து பங்கேற்றுவருகிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மஹா பஞ்சாயத்து என்ற பெயரில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில், செப்டம்பர் 27ஆம் தேதி (இன்று) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற மாநில கட்சிகளும் ஆதரவளித்தன. தமிழ்நாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியனவும் பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தின. இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் பல இடங்களில் இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை பரவலாக நடத்தினர்.
இது தவிர தமிழ்நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.எம்., சி.பி.ஐ. ஆதரவு விவசாய சங்கங்களோடும், இதர விவசாய சங்கங்கள் மற்றும் கட்சிகளோடும் இணைந்து பங்கேற்று ம.ஜ.க.வினர் மறியலில் கைதாகினர்.
நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே மேலப்பாகையில் கிழக்கு கடற்கரை சாலையில் மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த மறியலில் திரளான ம.ஜ.க.வினர் பங்கேற்றனர். இதில் சி.பி.எம்., விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முன்னணியினரும் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் இ.சி.ஆர். சாலையில் திருச்சி, தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. மருத்துவ காரணங்களுக்கான வாகனங்களுக்கு மட்டும் வழிவிடப்பட்டது.
குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே கிராமம், கிராமமாக மக்கள் தன்னெழுச்சியாக மறியல் நடத்தியதும், இவர்களுக்கு ஆதரவாக வணிகர்கள் காலை முதல் மதியம் 12 மணி வரை கடைகளை அடைத்ததும் குறிப்பிடத்தக்கது. தமிமுன் அன்சாரியோடு, அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் திருப்பூண்டி சாகுல், கீழையூர் ஒன்றியச் செயலாளர் ஜியாவுல் ஹக், மாவட்ட விவசாய அணி செயலாளர் முகம்மது ஜெக்கரியா, திருப்பூண்டி கிளைச் செயலாளர் ஹாஜா மொய்னுதீன் உள்ளிட்ட ம.ஜ.க.வினர் பலரும் பங்கேற்றனர்.