கோவையில் 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த 11ஆம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 12ஆம் வகுப்பு படித்தபோது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் (31) பாலியல் அத்துமீறலால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஆசிரியரின் பாலியல் அத்துமீறல் தொடர்பாக பள்ளி முதல்வரிடம் மாணவி புகார் அளித்தும் சம்பவத்தை மறைத்து, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (46) நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். அதனால் அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை நடைபெற்றதை அடுத்து, மிதுன் சக்கரவர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 2 நாட்கள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நாளை (27.11.2021) மாலை ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.