விழுப்புரம் அருகே உள்ளது அய்யனாம்பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மல்லிகா வயது 58. கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து திடீரென்று வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் மல்லிகாவை தேடிப் பார்த்துள்ளனர், கிடைக்கவில்லை. உறவினர் வீடுகள் உட்பட எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு அதே ஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பெண் உடல் ஒன்று சடலமாக மிதப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அது ஐந்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன மல்லிகாவின் உடல்தான் என்று அடையாளம் கண்டறியப்பட்டது. அவரது உடல் அழுகிய நிலையில் சடலமாக கிணத்தில் மிதந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து மல்லிகாவின் சடலத்தைக் கயிறு கட்டி வெளியே மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மல்லிகாவின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மல்லிகாவின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்து, மல்லிகா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து அவரை கிணற்றில் வீசிவிட்டுச் சென்றனரா? இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.