'வில்லுக்கு விஜயன். சொல்லுக்கு அர்ஜூனன்.
சொன்ன சொல்லைத் தவற மாட்டார் ரூபி.மனோகரன்.
அவரைக் காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்' -டி.ஐயப்பன்.
நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் பேருந்து நிலையச் சுவரில் எழுதப்பட்ட இந்த வாசங்களும் அறிவிப்பும் நாங்குநேரி வாசிகளின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் பரபரப்பு நெருப்பையும் பற்ற வைத்திருக்கிறது. காரணம் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிற அந்த வாசகங்கள்தான். இந்தப் பக்கமே காணவில்லை என்று சொல்வது தேர்தல் முடிந்து எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்று ஐந்தே மாதங்களான தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரசின் ரூபி.மனோகரனைத் தான்.
மிகக்குறுகிய காலத்திலேயே இந்த அளவுக்கு மக்களின் விமர்சனத்திற்குள்ளான நிலவரம் பற்றி அறியும் பொருட்டு சுவர் விளம்பர அறிவிப்பு செய்த தொகுதியின் மக்கள்நல ஆர்வலருமான சுப்பிரமணியன், ஐயப்பன் இருவரிடம் பேசிய போது, அவர்களோ, ''மானாவரிப்பகுதியான நாங்குநேரி தொகுதியில் விவசாயம் என்பது வானத்தையும் ஆற்று வழி நீரையும் நம்பிய பகுதி என்றாலும், சுதந்திரமடைந்து இவ்வளவு காலம் போன பின்பும் எந்த ஒரு தொழில் வளமுமில்லாத முன்னேற்றம் காணாத தொகுதியானதற்கு ஆதிமுதல் காரணமே 1989ல் தொகுதி சார்ந்த எம்.எல்.ஏ.வான ஆச்சியூர் மணிக்குப் பின்பு 32 வருட காலமாக எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் முதல் தற்போதைய எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் வரையிலானவர்கள் அனைவரும் தொகுதி சாராத வெளியூரிலிருந்து இறக்குமதியான வேட்பாளர்களே. ஏனெனில் தொகுதி சார்ந்தவர்கள் எம்.எல்.ஏ.வாக இருந்திருப்பார்களோயானால் ஒரளவிற்கு மக்களின் கஷ்ட நஷ்டம் தெரியும், தொகுதியும் முன்னேற்றப்பாதைக்குப் போயிருக்கும். அதற்கான குடுப்பினை எங்களுக்குக் கிட்டவில்லையே. அதனால் தான் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
தொகுதியின் கண் போன்றும் இருதயமுமான பகுதி நான்குநேரி. நகரம் மற்றும் சுற்றுப்பட்டிலுள்ள கிராமமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்வாதாரம், விவசாயம், இன்ன பிற வகைகளுக்காக நாங்குநேரிக்குத்தான் வரவேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலை வேறு நகரின் பக்கமாகவே செல்வது ஒரு அடையாளம் மட்டுமே.
மக்களின் நடமாட்டத்தால் வியாபாரமும், பிறதொழில்களும் நாங்குநேரியில் படுபிசியாக நடந்து வந்ததுடன் நகரவாசிகளின் வாழ்வாதாரமும், ஆரோக்யமாகவே இருந்து வந்தது. ஏனெனில் தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பறக்கிற அனைத்து பேருந்துகளுமே நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்கிற காலம் என்பதால்தான் அத்தனை புழக்கங்களும் ஏற்பட்டதற்கான முக்கிய வகைகளில் ஒன்று.
யார் கண்பட்டதோ, வாங்கிய சாபமோ, வரமோ தெரியவில்லை. 1982ன் நகரின் பக்கமாக பைபாஸ் சாலை போடப்பட்டதால், தெற்கேயும் வடக்கேயும் செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையிலேயே பறக்கத் தொடங்கிவிட்டன.
1985க்குப் பின் நாங்குநேரி ஊருக்குள் வந்துசெல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து காலப் போக்கில் மிகவும் சுருங்கிவிட்டன. அதுவும் பகல் இரவு என்று நாள் முழுக்க பரபரப்பாக வந்துபோன பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோய் விரல் விட்டு எண்ணுகிற அளவுக்கு அக்கம்பக்கக் கிராமங்களுக்காகச் செல்லுகிற நான்கு நகரப் பேருந்துகள் மட்டுமே ஊருக்குள் வந்து செல்லும்படியாகிவிட்டது.
ஒருநகரின் முன்னேற்றத்தின் அச்சாணியே போக்குவரத்துதான். இங்கே அந்த அச்சாணியே உடைந்துபோய் விட்டது. போக்குவரத்து இல்லாததால் ஜனப் புழக்கம் ரொம்ப குறைந்துவிட்டது. நகர மற்றும் வெளிப்பகுதி மக்கள் ரொம்ப சிரமப்படுறாக. மட்டுமல்ல நகரின் அனைத்து வியாபாரமும் விவசாய தொழிலும் முடங்கிப் போனதுடன், கடைகள் காற்றுவாங்குகின்ற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதுல குடிதண்ணீர் பிரச்சணை வேற. பேருந்துகளில் நாங்குநேரி செல்ல வேண்டும் என்று வருகிற மக்களைப், பயணிகளை பேருந்துகளில் ஏறுவதற்கு மறுக்கப்படுகிறார்கள். வெறுப்பாக அவர்களைப் பார்க்கிறார்கள். வெறுப்பில் அவர்களை ஏற்றுவதே இல்லை அப்படியே ஏற்றினாலும் ஊருக்குள் வராமல் பைபாஸ் காட்டுப் புறத்திலேயே இறக்கி விடுகிறார்கள். கேட்க நாதியத்துப் போனோம். அங்கிருந்து மக்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் நடந்து ஊர் வரவேண்டும். அதுவே தான் இரவிலும் .பெண் பிள்ளைகளின் கதி என்னவாகும். பயம்வேற. யோசிச்சிப்பாருங்க.
அதனால் தான் ஆண்டாண்டு காலம் அனுபவிக்கிற இந்த இம்சைக்கு முடிவுகட்ட பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும்ணு ஊரே திரண்டு மறியல், சாலையில் போராட்டம் நடத்தினோம். வழி வழியாய் வந்த எம்.எல்.ஏ.க்கள் கலெக்ட்டர்கள், போக்குவரத்து நிர்வாகம் என்று பலரிடமும் மனுக் கொடுத்தோம் பலனில்லை. கவனிப்பாரில்ல. எம்.எல்.ஏ. ரூபி.மனோகரனிடம் மனு கொடுத்தோம் அவரும் கவனிக்கல்ல. அதனால் தான் ஊர் சார்பா இப்புடி சுவர்ல எழுதுனோம்'' என்றார்கள் வேதனை மண்டிய குரலில்.
இது குறித்து நாம் எம்.எல்.ஏ.வான ரூபி.மனோகரனிடம் பேசியதில்,
''நான் எங்கேயும் போகல. ரெண்டு வருஷமா தொகுதியில தான் சுத்திக்கிட்டுவர்றேன். எத்தனையோ நிவாரணங்களைச் செய்திருக்கேன். நகரின் நிலைமைகளை நான் அறிந்தவன்தான். பேருந்து பிரச்சினைக்கு தீர்வு காண நிர்வாகத்துடன் பேசியுள்ளேன். இப்போது ஒடுற பேருந்துகளின் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஊருக்குள் வராமல் அவர்களின் இஷ்டப்படி, அவர்களின் வசதிக்காக மக்களை சாலையில் இறக்கி விட்டு விடுகிறார்கள். நிச்சயம் இதற்கு தீர்வு காண்பேன்'' என்றார்.
நாங்குநேரி நகரம் ஒளிருமா. நாலாபக்கமும் அதன் ஒளி படருமா என்ற ஏக்கம் தெறிக்கிறது ஒட்டு மொத்த நகரத்திலும்.