தமிழ்நாடெங்கும் கரோனா நோயைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்த கடந்த 12 மற்றும் 19 தேதிகளில் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 236 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று (26.09.2021) மூன்றாவது வாரமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 353 இடங்களிலும் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 162 இடங்களிலும் என மொத்தம் 115 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்தியேகமான ரேடியோ தெரபி துறை திறப்பதற்கான ஆணையை மருத்துவமனையின் டீன் வனிதாவிடம் அமைச்சர் வழங்கினார். மேலும், 100% தடுப்பூசி போடப்பட்ட 10 ஊராட்சிகளுக்கு அமைச்சர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.