திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி குறித்த ஆய்வுக்கூட்டம் ஜூன் 10ஆம் தேதி (இன்று) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி முன்னிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளும்கட்சியான திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் செங்கம் கிரி, வந்தவாசி அம்பேத்குமார், கலசப்பாக்கம் சரவணன், செய்யார் ஜோதி, எம்.பிக்கள் திருவண்ணாமலை அண்ணாதுரை, ஆரணி விஷ்ணுபிரசாத் மற்றும் மாவட்ட சேர்மன், ஒன்றியக் குழு தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உட்பட அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த போளுர் எம்.எல்.ஏ அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, ஆரணி எம்.எல்.ஏ சேவூர். ராமச்சந்திரன் என இரண்டு எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு தலைவர்கள் பெரும்பாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
கூட்டம் தொடங்கியதும், கரோனா தடுப்புப் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது குறித்தும், செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் எ.வ. வேலு பேசினார். தொடர்ச்சியாக கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்டிக்கர்களை வெளியிட்டார். அதற்கடுத்த சில நிமிடங்களில் கூட்ட அரங்கில் இருந்த செய்தியாளர்களிடம், கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிக்கான ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். செய்தியாளர்கள் கலந்துகொள்ளக்கூடாது என மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு. அதனால் வெளியே போங்கள் என செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறி செய்தியாளர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.
வெளிப்படையான நிர்வாகம் எனச் சொல்லி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையில் இருந்து கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கிறார்; செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். சட்டப்பேரவை நிகழ்வையும் நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது. அரசு நிர்வாகம் அப்படி வெளிப்படையாக செயல்படும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்முறையாக புதிய அரசின் அமைச்சர் கலந்துகொண்டு ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படக்கூடாது என உத்தரவிட்டு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்கள்.
இது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய கூட்டம் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் சொன்னார்கள். ஆனால் மக்கள் பிரதிநிதிகளாக அல்லாத திமுக பிரமுகர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் எந்த அடிப்படையில் அமர்ந்திருந்தார்கள் என்கிற கேள்விக்கு அதிகாரிகள் பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.
கூட்டத்தில் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துதானே பேசப்போகிறார்கள். அந்தத் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்ததானே பத்திரிகை, ஊடகங்கள். இதில் என்ன ரகசியம் வெளியாகிவிடப்போகிறது. அரசுக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் அமரலாம், ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகையாளர்கள் அமரக்கூடாது என்பது என்ன நியாயம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது இதேபோன்று மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களில் செய்தியாளர்கள் உள்ளே வரக்கூடாது எனச் சொல்லி தடைப்போட்டார்கள். மக்கள் பிரதிநிதியாக இல்லாத அதிமுகவினர் பலரும் ஆய்வுக்கூட்டத்தில் அமர்ந்து கேள்விகள் கேட்டனர். அதிமுக ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் தங்களது செல்ஃபோன்கள் வழியாக சமூகவலைதளங்களில் கூட்டத்தை லைவ் டெலிகாஸ்ட் செய்தார்கள். இப்போது திமுக ஆட்சி நடக்கிறது, கடந்தகால அதிமுக அமைச்சர்களைப் போல், இப்போது திமுகவைச் சேர்ந்த அமைச்சரும் செய்தியாளர்களை வெளியே அனுப்பச் சொல்வது சரியா என்கிற கேள்வி எழுகிறது.