‘மின்கட்டணமா பகல் கொள்ளையா, எங்கே போனார் மின்துறை அமைச்சர்’ என்கின்ற கண்டன அறிக்கையை திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வெளியிட்டிருந்தார். தற்பொழுது அவரது அறிக்கைக்கு தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
மின் கட்டணம் குறித்து உண்மைக்கு மாறான அறிக்கையை செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ளார். முதல்வரைப் பற்றி பேச செந்தில்பாலாஜிக்கு எந்த தகுதியும் இல்லை. யாரை திருப்திப்படுத்த செந்தில்பாலாஜி அறிக்கை வெளியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. கூடுதல் கட்டணம் எனில் அதற்காக முறையீடு செய்து நியாயம் பெறுவதற்கு வழிமுறைகளும் உள்ளன. தவறிழைக்கப்பட்டிருந்தால் அதற்கான சட்ட முறையீடு செய்யவும் மின் பயனீட்டாளர்களுக்கு உரிமை உண்டு.
கரோனா காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருப்பதால் மின் அளவு கூடுதலாக இருக்கும் என்பது இயல்பு. முதல் மாத அளவை அடிப்படையாக கொண்டு அடுத்தடுத்த மாதங்களுக்கு கணக்கிட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்படும். கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கிறார்கள் என திமுக உண்மைக்குப் புறம்பான பிரச்சாரத்தை செய்து வருகிறது எனக்கூறியுள்ளார்.