விருதுநகரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நடைபெற்ற நூல்கள் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழாவில், தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும்போதுதான் உண்மையான வரலாற்றை அனைவரும் அறிய முடியும் எனப் பேசினார்.
அப்போது அவர் “தன்னுடைய சுவடுகளை மிக அழுத்தமானதாகக் கொண்டது விருதுநகர் மாவட்டம். வரலாற்றில் மைக்ராலாஜி பீரியட் எனக் கூறப்படும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழக்கூடிய பகுதியாக, மக்கள் வசிக்கக் கூடிய பகுதியாக, அந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சியில், இன்றைக்கும் விருதுநகர் மாவட்டம் இருந்து வருகிறது. நாகரிகம் தழைத்து செழித்து வாழ்ந்து வந்த நிலப்பரப்பாகவும் இருந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளமாக உள்ளன. சோழர், பாண்டியர் காலங்களில் எல்லாம் விருதுநகர் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தின் முழு வரலாற்றையும் கொண்டு வர வேண்டும் என நமது ஆய்வு மையம் முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஆய்வுகளோடு விட்டுப்போன செய்திகளையும் ஒன்றாக இணைத்துக்கொண்டு, உண்மையான வரலாற்றை நாம் எழுத வேண்டும். நமது ஆதி அந்தம் முழுவதும் வெம்பக்கோட்டை தொல்லியல் அகழாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்.
இக்காலத்தில், தமிழ்நாடு முழுவதும் நல்ல வரலாற்று ஆய்வாளர்கள் உருவாகி வருகின்றனர். அதிலும், பல இளம் ஆய்வாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பல புதிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்து மத்திய தொல்லியல் ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம். அதிலும் குறிப்பாக, பொற்பனைக்கோட்டை பகுதியில் தொல்லியல் ஆய்வுகளை தமிழக அரசின் சார்பில் செய்திட வேண்டும். வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்யப்படும் போதுதான் உண்மையான வரலாற்றை தெரிந்துகொள்ள முடியும்.
எந்த நிலப்பரப்பில் இருந்து இந்தியாவினுடைய வரலாற்றை எழுதுவது முறையாக இருக்குமோ, அதை தென்கோடி பரப்பிலிருந்து இந்திய வரலாற்றை எழுதும் முயற்சியில் கரம் கோர்த்திருக்கும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு துணை நிற்கவேண்டும்.” என்றார்.