சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையின் கரோனா சிறப்பு வார்டில் ஆக்சிஜன், படுக்கைகள் கையிருப்பு பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (08/05/2021) நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை கீழ்ப்பாக்கத்தைப் போல் மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்திலும் கரோனா தடுப்பூசி போடப்படும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் முதல்வர் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். ஆம்புலன்சில் வரும் கரோனா நோயாளிகளை விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு சித்தா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கரோனா சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 12,500 படுக்கைகளை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.