பென்னிகுவிக் நினைவு இல்லத்தை அகற்றிவிட்டு அங்கு கலைஞர் நூலகம் அமைத்தால் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். முல்லைபெரியாறு அணை அமைய காரணமாக இருந்த கர்னல் பென்னிகுவிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைய உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஆனால் நூலகம் அமையும் இடத்தில் பென்னிகுவிக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஆட்சியர் மறுத்திருந்தாலும் அங்கு பென்னிகுவிக் வாழ்ந்ததை தென் பகுதி விவசாயிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த சூழ்நிலையில் ஒரு வரலாற்றை அழித்து விட்டு மற்றொரு வரலாற்றை உருவாக்க நினைக்கும் தமிழ்நாடு அரசின் செயலை கண்டிப்பதாக அறிக்கையில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அப்படி நடந்தால் விவசாயிகளின் ஆதரவுடன் அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என அந்த அறிக்கையில் கூறியிருந்தனர். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் அரங்கம் அமைப்பது அதிமுகவிற்கு கசக்கிறது. கலைஞர் நூலகம் அமைப்பதற்காக பென்னிகுவிக் நினைவு இல்லத்தை இடிப்பதாக அதிமுக வெளியிட்டுள்ள அறியாமைகளின் தொகுப்பு இது. கலைஞர் நூலகத்திற்காக 7 இடங்கள் பார்வையிடப்பட்டு இறுதியாக மதுரை நத்தம் சாலையில் நூலகம் அமைய உள்ளது. இந்த இடம் பென்னிகுவிக் வாழ்ந்ததாக அதிமுக திடீரென புரளியை கிளப்பி உள்ளனர், மதுரைக்கு வரும் நூலகத்தை எப்படியாவது தடுக்கும் நோக்கில் அதிமுக மலிவு அரசியல் நடத்துவது அப்பட்டமாக வெளியே தெரிகிறது'' என தெரிவித்துள்ளார்.