Skip to main content

இலங்கைத் தமிழர்கள் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Minister and officials who provided welfare assistance to the Sri Lankan Tamils camp

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரை ஒட்டியுள்ள பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அவர்கள் இந்தப் பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்துவருகிறார்கள். அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் ராம்குமார், வட்டாட்சியர் சிவகுமார், செந்தில்குமார் மற்றும் சமூகநல வருவாய்த் துறையினர் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

அதேபோல், 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 240 பயனாளிகளுக்கு உடைகள், 97 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் குடும்பத்திற்குத் தேவையான பாத்திரங்கள், 14 ஆயிரம் மதிப்பீட்டில் அப்பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எரிவாயு இணைப்பு, சமூக மேம்பாட்டு நிதியாக 75,000 என நான்கு லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கினார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு நபருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அரசாணையும் வழங்கினார் அமைச்சர். அப்போது பேசும்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 200 நாட்களில் செய்துள்ள சாதனைகள் குறித்து பேசினார்.

 

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே கரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் தமிழக முதல்வரின் கடும் உழைப்பின் மூலம் கரோனாவை ஒழித்தார். தமிழக மக்களின் நலனுக்காக மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, மகளிருக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் உதவித்தொகை, இப்படி பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதை உடனுக்குடன் செயல்படுத்திவருகிறார். ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

இன்னும் இதுபோன்று பல்வேறு வகையான மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக முனைப்போடு பாடுபட்டுவருகிறார் தமிழக முதல்வர்” இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் ராமு, இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, வழக்கறிஞர் அணி சரவணன் உட்பட ஏராளமான திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்