தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கென்று துவங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சியைத் தரம் உயர்த்தி புதிய வடிவமைப்பில், தமிழ்நாடு முதல்வரின் பெயரை உலக அளவில் கொண்டுசேர்த்திருக்கிறார்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வியறிவு குறைந்துவிடக்கூடாது என்பதற்காக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆடியோ, வீடியோ, அனிமேஷன் என்று மாணவர்கள் மிக எளிமையாக பாடத்திட்டங்களைப் புரிந்துகொள்ள செய்திருக்கும் பல திட்டங்கள் உலக அளவில் கல்வித் தொலைக்காட்சிக்கு ஒரு தனிப்பெரும் அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. தன்னுடைய அடுத்த இலக்காக அன்பில் மகேஷ் கையிலெடுத்திருக்கும் புதிய முயற்சி, தமிழ்நாடு முழுவதும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு 60 நாட்களில் எழுத்தறிவு புகட்டுவது.
தமிழ்நாடு முதல்வரின் ஒப்புதலோடு துவங்கிய இந்தத் திட்டத்தைத் திருச்சி மணிகண்டம் ஒன்றியத்தில் துவங்கிவைத்துள்ளார். மணிகண்டம் ஒன்றியம் கே.கள்ளிக்குடியில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், விழாவிற்கு வந்திருந்த மூதாட்டிகளை அவரருகில் அமரவைத்து, அவரே கைப்பலகையில், எழுதிக் காண்பித்து, “எழுத, படிக்க கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு பாதுகாப்பளிக்கும், தைரியத்தை வளர்க்கும்” என்று அறிவுரை கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் எம்.ஜி. ஆருக்கு மக்கள் மனதில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. குறிப்பாக வயதான மூதாட்டிகளிடம் அவர் காட்டிய அன்பும், ஆதரவும், பெரிய அளவில் இன்றும் பேசப்பட்டுவருகிறது. தற்போது எம்.ஜி.ஆரின் பாணியை அமைச்சர் அன்பில் மகேஷ் கையாள ஆரம்பித்திருக்கிறார்.
கே.கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை (65) என்ற பெண்மணி நூறு நாள் திட்டத்தில் வேலை செய்துவருகிறார். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாத நிலையில், இந்த எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் எழுதப் படிக்க கற்றுக்கொள்ள ஆர்வமுடன் வந்திருந்த அவரைப் பார்த்து அமைச்சர், "உங்களுடைய ஆர்வம் எனக்கு வியப்பளிக்கிறது... தொடர்ந்து நீங்கள் இந்த திட்டத்தின்கீழ் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லி, அவரே கைப்பலகையை வாங்கி உங்களுடைய பெயர் அஞ்சலை. அதில் துவங்கும் தமிழின் முதல் எழுத்து ‘அ’ என்ற எழுத்தை முதலில் எழுத கற்றுக்கொள்ளுங்கள் என்று எழுத கற்றுக்கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் அவருடைய முழுப் பெயரையும் எழுதும் அளவிற்கு கற்றுக்கொடுத்துவிட்டார்.
"இந்த திட்டத்தினை முறையாக செயல்படுத்தி, தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவதே அதிகாரிகள், ஆசிரியர்களின் இலக்காய் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.