திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்த குடியில் ரூபாய் 12.96 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திறந்துவைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் நேரடியாக அந்தந்த பகுதியிலுள்ள மாணவர்களை அவர்களது இருப்பிடத்திற்கு தேடிச்சென்று கல்விப் பணி மேற்கொண்டுவருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமப்புறப் பகுதிகளில் தொலைதொடர்பு என்பது இல்லாத சூழ்நிலை தற்போது நீடித்துவருகிறது. எனவே அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” என்று கூறினார்.
மேலும், “குழந்தை தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். இதுகுறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் மூலம் சேகரித்து, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்திட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, அதற்கான இறுதி ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். 14417 என்ற உதவி எண் மூலம் புகார்களைத் தெரிவிக்க தற்போது மாணவர்களிடையே அதற்கான விழிப்புணர்வை ஒவ்வொரு பள்ளிகளிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றும் தெரிவித்துள்ளார்.