Skip to main content

"ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

Published on 17/07/2022 | Edited on 17/07/2022

 

"The mind does not agree with the rest" - Chief Minister M.K.Stalin!

 

தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும் தமிழ்நாட்டுப் பொதுமக்களுக்கும் உங்களில் ஒருவன் எழுதும் மடல். கரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு நலன் விசாரித்தனர். பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கடிதம் மூலமாக நலம் விசாரித்தனர். அந்தக் கடிதங்களை எல்லாம் தொடர்ந்து படித்து வருகிறேன். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையுடன் அந்தக் கடிதங்களும் உடலுக்கும் மனதுக்குத் தெம்பு தந்தது. எடுத்துக்காட்டாக, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் இருக்கும் பெரியசோரகையிலிருந்து தங்கராஜ் எனும் உடன்பிறப்பு எழுதிய கடிதத்தில், "எங்களின் சக்திவாய்ந்த திராவிட மாடல் முதலமைச்சரை எந்தச் சக்தியும் நெருங்காது" எனக் குறிப்பிட்டு, மிகுதியான அன்போடு, தனக்குத் தெரிந்த கை வைத்திய முறைகளையெல்லாம் குறிப்பிட்டு அனுப்பியிருந்தது நெகிழ வைத்தது. 

 

மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் காரணமாக நலமடைந்திருக்கிறேன் என்று தங்கராஜ் அவர்களுக்கு அதே அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல எண்ணற்ற கடிதங்கள் என் உடல்நலன் மேல் அக்கறை கொண்டு எழுதப்பட்டிருப்பதுடன், எனக்குள்ள பெரும் பொறுப்பையும் உணர்த்தக் கூடியதாக இருந்தது. முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்பதால் இந்தக் கரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருமலும் சளியும் மட்டும் இருந்ததால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

 

மருத்துவர் மோகன் காமேஸ்வரன், மருத்துவர் அரவிந்தன், மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவர் தீரஜ் என இந்த நான்கு மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் என்னை தினமும் நல்ல முறையில் கவனித்து, விரைந்து நலம் பெற உதவினார்கள். அவர்களுக்கும் அவர்களுடன் துணைநின்ற மருத்துவக் குழுவினருக்கும் இந்தக் கடிதத்தின் வாயிலாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. உங்களில் ஒருவனான என்னை நம்பி, தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பெரும் பொறுப்பினை உணர்ந்து, முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை, எடுக்க வேண்டிய முடிவுகளை, செயல்படுத்த வேண்டிய திட்டங்களை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன். திங்கட்கிழமையன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதே நாளில் (ஜூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது.

 

நம்முடைய மாநிலத்திற்குப் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டி, அதற்கான தீர்மானத்தை முதலமைச்சராக அவர் சட்டமன்றத்தில் முன்மொழிந்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தீர்மானத்தை  நிறைவேற்றிய நாள்தான் ஜூலை 18. பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு என்று மூன்று முறை சொல்ல, அனைத்து உறுப்பினர்களும் ‘வாழ்க.. வாழ்க.. வாழ்க’ என்று முழங்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை இந்தியத் துணைக் கண்டத்திற்கு உணர்த்திய நாள்.

 

அந்த நாளினை, உங்களில் ஒருவனான எனது தலைமையிலான நமது அரசு, 'தமிழ்நாடு நாள்' என ஆண்டுதோறும் கொண்டாடத் தீர்மானித்திருப்பதால், சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு திருநாள்’ என்ற நிகழ்வு திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன்.

 

தமிழ்நாடு என்ற பெயரால் மட்டுமல்ல, 'திராவிட மாடல்' ஆட்சியின் விளைவினாலும் நம் மாநிலத்திற்குப் பெருமைகளைச் சேர்த்து வருகிறோம். அதில் ஒரு பெருமையாகத்தான், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். செஸ் ஆட்டத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்திடும் வகையில் முன்னோட்ட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணொலியும் வெளியிடப்பட்டு இளைஞர்கள், மாணவர்களிடம் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 

 

திருச்சியில் 2,140 பேர் கலந்துகொண்ட செஸ் போட்டி உலக சாதனை புரிந்திருக்கிறது. மாண்புமிகு இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28 அன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்த நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்பிக்க இருக்கிறார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற செஸ் சாம்பியன்களும், இளம் வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்கான ஆயத்தமும் ஆர்வமும் இப்போது வெளிப்படத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது.

 

‘வருக.. வருக.. தமிழ்நாட்டுக்கு வருக…’ என 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அமைந்த முன்னோட்டக் காணொலியைத் தொடர்ந்து, அதன் முழுப் பாடலும் அடங்கிய காணொலி விரைவில் வெளிவர இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளால் முழுமையான உடல்நலத்துடன் உங்களில் ஒருவனான நான் பங்கேற்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமந்து, நாட்டு நடப்பைக் கவனிப்பதுபோலவே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பினையும் சுமந்திருப்பதால், கழகப் பணிகளையும் மருத்துவமனையிலிருந்தபடியே கவனித்து வந்தேன்.

 

கழக அமைப்புத் தேர்தல்கள் ஒன்றிய அளவில் முடிவுற்று, ஓரிரு இடங்களில் ஏற்பட்ட சின்னச் சின்ன சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விரைவில் முழுமையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, பகுதி கழகச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் நடத்தி முடித்து, நமக்கான இலட்சியப் பாதையில் பயணித்து, மக்களுக்கான பணியினைக் கழகத்தினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய அன்பு வேண்டுகோள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சைவத் தமிழ்நெறி பாடிய திருநாவுக்கரசர் கூறியது போல, ‘என் பணி மக்கள் தொண்டாற்றுவதே’ என்று உறுதியேற்று செயலாற்றி வருகிறேன். 

 

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும், உலக நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய மாநிலமாகவும் உயர்த்த வேண்டும் என்பது என் பெருங்கனவு. அதனை அடையவேண்டுமென்றால் இப்போது உழைப்பதைவிடவும் இன்னும் அதிகமாக உழைத்திட வேண்டும். நான் மட்டுமல்ல, நம்முடைய அரசில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் அயராது உழைத்திட வேண்டும். ஆளுங்கட்சி என்ற முறையில் கழகத்தினர் ஒவ்வொருவருக்கும்கூட அந்தப் பொறுப்பு இருக்கிறது.

 

உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும். நம் பாதையில் நாம் உறுதியாகப் பயணிப்போம். சில அரைவேக்காடுகள் குறுக்கும் நெடுக்குமாக விமர்சனச் சேற்றை வீசியபடி ஓடும். நாம் சற்று ஒதுங்கிக் கொண்டு, அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். நம்மைத் தாக்கி, அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது. அரசியல் பாதையில் குறுக்கிடும் அத்தகைய பேர்வழிகளை, இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறிச் செல்வோம்.

 

நான் ஏற்கனவே திருவண்ணாமலையில் சொன்னபடி 'I Don't care' என்று அவர்களை அலட்சியப்படுத்துங்கள். வம்படியாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரைத் தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம். மக்களுடன் நாம் எப்போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.