Skip to main content

67 ஆவது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!  

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

Mettur Dam reaches 100 feet for 67th time!

 

மேட்டூர் அணை கடந்தாண்டு மட்டும் நான்கு முறை 100 அடியை எட்டிய நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக 100 அடியை எட்டியுள்ளது. இதனால் மொத்தமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67வது முறையாக 100 அடியை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28,650 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக் கட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டுகளில் 67 ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

 

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பாசன தேவைக்கான தண்ணீர் குறைந்தே இருக்கிறது. மீண்டும் மழை குறைந்து மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் திறந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. வரும் 27ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பாசன தேவை குறையும். இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.