Melmaruvathur watershed encroachments: Collector ordered to file report on activities

மேல் மருவத்தூரில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துபாக்கம் பகுதியில் 'கீழ் மருவத்தூர்' ஏரி இருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கடந்த 2015ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆக்கிரமிப்பு இடத்தில்தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் கொடுத்த புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.