Skip to main content

"யாரிடம் சொல்வது உண்மை? மத்திய அரசின் நிலைபாடு என்ன?" - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி! 

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

 

mekedathu dam construction makkal needhi maiam kamal haasan statement

 

காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (14/07/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்தாய் வாழி காவேரி" என்று பாடும் நம்மை "நின்றாய் நீ காவேரி" என்று வாடும் நிலைக்குத் தள்ளுகிறது கர்நாடக அரசு. 

 

காவிரி நதிநீர் பங்கீட்டிற்காக 1890-ல் அன்றைய மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே பேசசுவார்த்தை; 1892-ல் ஒப்பந்தம்; மீண்டும் 1924-ல் ஒப்பந்தம்; 50 ஆண்டுகள் கழித்து 1974-ல் ஒப்பந்தம் புதுப்பித்தலில் சிக்கல்; 1991-ல் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு; 2007-ல் இறுதித் தீர்ப்பு; 2013-ல் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியீடு; 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் என 130 ஆண்டுகளாக காவிரி விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையே தீராத பிரச்சனையாக, உறவுகளைச் சீர்குலைக்கும் சிக்கலாகி நீடிக்கிறது. 

 

தடையேதுமின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கனவே பல அணைகளைக் கர்நாடக அரசு கட்டிவிட்டது. மேலும், ஒரு அணையைக் கட்டி தமிழக விவசாயிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைக்கும் கர்நாடக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

 

இரு மாநிலங்களும் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியாமல் போகும் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைகளை உரிய வழிமுறைகளின் மூலம் தீர்த்து வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு, அரசியல் சாசனப் பொறுப்பு மத்திய அரசிற்கு இருக்கிறது. ஆனால் துரதிஷ்ட வசமாக மத்திய அரசு அதை உணரவில்லை என்பதே வரலாறு. 

 

தமிழகத்தின் சார்பாக நமது நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரைச் சந்திக்கும் போது, அவரிடம் உங்கள் விருப்பமில்லாமல் மேகதாது அணைக்கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார். 

 

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஜலசக்தித்துறை அமைச்சரைச் சந்தித்த போது வெகு விரைவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். இந்த இரண்டு செய்திகளும் சம்பந்தப்பட்டவர்களால் பத்திரிகையாளர்களிடம் பகிரப்பட்டுள்ளது. அப்படியெனில் ஜலசக்தித்துறை யாரிடம் சொல்வது உண்மை? மத்திய அரசின் நிலைபாடு என்ன? அது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி செயல்படுமா அல்லது ஓட்டு அரசியலுக்கு எது உகந்ததோ அதை செய்யுமா? 

 

தமிழக பிரதிநிதி சந்திக்கும் போது தமிழக குரலிலும், கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதி சந்திக்கும் போது கர்நாடகக் குரலிலும் பேசுவது தேசத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல். இது அரசியல் சாசனத்தின் மாண்பைக் குலைக்கிறது. 

 

அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்சனையில் கர்நாடகத்தின் பக்கமாகவே மத்திய அரசு சாய்ந்திருப்பது வழமை. இந்த அநீதிப் போக்கு இனியும் தொடர்வது நியாயமல்ல. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும். நீதியின் குரலாக ஒலிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்