சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவ தகவல் மற்றும் மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று (15.09.2021) தொடங்கிவைத்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, “1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களிடம் உரையாடுவதற்கு இந்த ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலைப் பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை மூலம் ஆலோசனை வழங்கப்படும். இதற்காக 333 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 40 மனநல ஆலோசகர்கள் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க தயார் நிலையில் உள்ளனர். 17ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அது 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் காலை 7மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறும்” என கூறினார்.