Skip to main content

எலிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக - கேரள எல்லையில் மருத்துவக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
kerala


தேனி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக - கேரள எல்லையில் மூன்று மருத்துவக் குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. கேரளா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதிலிருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள் இந்த நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் குழுவினர் மூலம் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்கு வேலைக்கு சென்று வருவதால் இங்கு எலிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கம்பம்மெட்டு, போடிமெட்டு, லோயர் கேம்ப் ஆகிய மூன்று இடங்களில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

கேரளாவில் இருந்து வரும் பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களை நிறுத்தி பயணிகளை சோதனையிட்ட பின்பே தேனி மாட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். அதுபோல் போடிமெட்டு பகுதியில் உள்ள சோதனை சாவடிகளை தேனி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன், கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டனர்.
 

kerala


இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..... ஸ்பைரோகிரீட் பாக்டீரியா மூலம் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடு, எலி, வாத்து, பன்றி, குதிரை போன்ற உயிரினங்களின் சிறுநீர் கலந்த தண்ணீர் மூலம் பிறருக்கு பரவுகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் கண், மூக்கு அல்லது வாய் வழியாக கிருமிகள் உடலில் புகுந்து இந்நோயை உண்டாக்கும். தண்ணீர் மாசுபடுவதால் பெரும்பாலும் இந்நோய் ஏற்படுகிறது. சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை இந்நோய்க்கிருமிகள் உயிர்வாழும்.

நோய் கிருமிகள் உடலில் நுழைந்தபின் 5 முதல் 15 நாட்களில் இதற்கான அறிகுறிகள் தெரியும். முதல் 7 முதல் 10 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். கண்களில் சிவப்பு, தலைவலி, குளிர், தசைவலி, உடல்வலி, வாந்தி, மஞ்சள்காமாலை, தோலில் தடிப்பு, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவையே இந்நோயின் அறிகுறிகள். குடிநீரில் குளோரின் கலத்தல், காய்ச்சி வடிகட்டிய குடிநீர் குடித்தல், காலணிகளை பயன்படுத்துதல், நீச்சல் குளங்களில் குளோரின் பயன்படுத்துதல், குடிநீர் குழாய்களை கசிவு இல்லாமல் பராமரித்தல், அசுத்தமான நீர் தேங்கியிருக்கும் இடங்களில் நடப்பதை தவிர்த்தல், குடியிருப்புகளை சுற்றி சுத்தமாக வைத்திருத்தல், ஆடு, மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணையை சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

சுகாதாரமற்ற இடங்களில் பணிபுரிபவர்கள், துப்புரவு பணியாளர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், தேங்கிய நீர்நிலைகளில் நீர்பிடிப்பவர்கள், விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எலிக் காய்ச்சலால் இந்த உறுப்பெல்லாம் பாதிக்கப்படுமா? - டாக்டர் இராஜேந்திரன் விளக்கம்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Dr Rajendran | Fever | Rat Bite Fever |

 

மழைக் காலங்களில் பலவகை காய்ச்சல் உருவாகிறது. அவற்றில் ஒருவகை எலிக் காய்ச்சல் ஆகும். இந்த வகை காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது. அதனால் எந்த உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்று ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் இராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

 

டெங்கு காய்ச்சல், மலேரியா போன்று இதுவரை எத்தனையோ வகையான காய்ச்சல்களைப் பார்த்திருப்போம். ஆனால் எலிக் காய்ச்சலைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த வகை காய்ச்சல் மழைக்காலத்தில் ஏற்படக்கூடியது. ஸ்பைரோகீட் என்ற விசக்கிருமியால் ஏற்படக்கூடியது. இந்த கிருமி பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீரால் பரவக்கூடியது. 

 

நோயால் பாதிக்கப்பட்டு இறப்பு நிலையை அடையும் எலி, சாவதற்கு முன் அதிகப்படியான சிறுநீரை வெளியேற்றும். அந்த சிறுநீரில் உள்ள விசக்கிருமிகள் மழைக்காலங்களில் தேங்கிய தண்ணீரில் கலக்கும். அங்கிருந்து பரவும் வேலை தொடங்கும். மழைத்தண்ணீரை வெறும் காலில் மிதிப்பதால் காலின் பாதத்தினை துளைத்துக் கொண்டு மனித உடலுக்குள் செல்லும். ஒரு வேளை கால் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டிருந்தாலோ, கீறல் காயங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலோ ஸ்பைரோகீட் கிருமிக்கு உடலுக்குள் செல்வதற்கு இன்னும் இலகுவாகி விடும். 

 

ஒரு பெரிய விஐபிக்கு தீவிரமான காய்ச்சல் ஏற்பட்டது. ஏதேதோ சோதனை செய்தும் சிகிச்சை செய்தும் சரியாகவில்லை. நான் தான் எலிக் காய்ச்சல் சோதனை செய்து பார்க்கலாமே என்றேன். அவரோ பெரிய விஐபி எங்குமே செருப்பு போட்டு போகாமல் போகமாட்டார், வீட்டுக்குள் கூட செருப்பு அணிவார். அவருக்கு எப்படி ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று சக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் அவரிடம் பேசிய போது கோவிலுக்குள் செருப்பு போடாமல் போனதாகவும் அங்கே ஒரு எலி செத்துக் கிடந்ததையும் பார்த்ததாகவும், மழை நீர் தேங்கி இருந்ததில் கால் நனைத்ததாகவும் சொன்னார். பிறகு எலிக் காய்ச்சலுக்கான சோதனை செய்து பார்த்தபோது நோய் உறுதியானது. அதற்கான சிகிச்சை கொடுத்து குணமாக்கினோம்.

 

அதனால் மழைக் காலங்களில் ஏற்படுகிற காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த வகை காய்ச்சலால் கல்லீரல், கிட்னி, நரம்பு மண்டலம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. எனவே மழைக் காலங்களில் எலிக் காய்ச்சலையும் மனதில் வைத்து நாம் வரும் முன் காப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
 

 

Next Story

பரவும் எலி காய்ச்சல்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Disseminated rat fever; Health Department Alert

 

கேரளாவில் பருவமழை தீவிரமாகியிருக்கும் நிலையில் அங்கிருக்கும் பகுதிகளில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..

 

பள்ளி மற்றும் கல்லூரிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக குளோரின் பயன்படுத்தி முறையாக கண்காணிக்க வேண்டும். பராமரிக்க வேண்டும். கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வருவதால் தமிழக - கேரள எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும்.

 

டெங்கு காய்ச்சல் பரவலுக்கான கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு லேசாக காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மாவட்ட துணை சுகாதார அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகத் தரப்பிலிருந்து அறிவுறுத்த வேண்டும். பள்ளி நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் சுகாதாரத்துறைக்கு டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.