நவம்பர் 19 ஆண்கள் தினத்தையொட்டி சென்னையில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் அருள்துமிலன், பொதுச்செயலாளர் மதுசூதனன் உள்பட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், 6 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ (வரதட்சனை தடுப்பு) பிரிவின் கீழ் கைது செய்யப்படும் ஆண்களை மத்திய, மாநில அரசு பணிகளில் இருந்து பணி நீக்கம் செய்யக் கூடாது. பொய்யா தொடுக்கப்படுகின்ற வரதட்சனை புகார்களில் கணவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயரை குற்றவாளியாக சேர்த்து வழக்கு பதிவு செய்யக்கூடாது.
உச்சநீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் 497 (கள்ளத் தொடர்பு)ஐ நீக்கி உத்தரவு பிரப்பித்துள்ளதால் சமுதாயத்தில் கள்ளத் தொடர்பு தவறில்லை எனும் தவறான கருத்து நிலவுகிறது. மேலும் கள்ளத் தொடர்புகளால் சமுதாய சீர்கேடுகளும் அதன் தொடர்ச்சியாக கொலைகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. எனவே மத்திய அரசு வரும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே கள்ள தொடர்பில் ஈடுபடும் ஆண் - பெண் இருவருக்கும் கடும் தண்டனை வழங்கும் விதமான புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் குற்ற செயலில் ஈடுபடுபவர்களை தண்டிக்க காவல்நிலையம், மகளிர் ஆணையம், சமூக நல அதிகாரி, நீதிமன்றம் என பல்வேறு அமைப்புகள் இருக்கும்போது ஆண்களை பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும், தொழில் அதிபதிர்களை மிரட்டி பணம் பறிக்கவும் பிரபலங்களை அவமானப்படுத்தவும் பழிவாங்கவும், அரசியல் காரணங்களுக்காகவும் மட்டுமே பயன்படுகின்ற வகையில் இயங்கும் மீ டூ இயக்கத்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆண்டிற்கு சுமார் பத்தாயிரம் திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை கூறுகிறது. இந்த தற்கொலைகளுக்கு பெரும்பாலும் மனைவி மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் மன அழுத்தமே காரணம். எனவே இதுகுறித்து தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்து தற்கொலை தூண்டுதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்தில் ஊனமுற்ற கணவன்கள், நோய் வாய்ப்பட்டு வேலை செய்ய முடியாத ஆண்கள், திடீர் வேலை வாய்ப்பை இழந்த கணவன்களும் மனைவியிடம் ஜீவானம்சம் கேட்க வகை செய்யும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125ல் திருத்தம் செய்ய வேண்டும். ஆண்களும் ஜீவனாம்சம் பெறும்படி சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், குறைகளையும் தெரிவித்து தீர்வு காண தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.