மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் டி.உச்சபட்டியைச் சேர்ந்த பெரியகருப்பத்தேவர்-பெருமாயி தம்பதியர்களுக்கு 1934 ம் வருடம் அக்டோபர் 15ஆம் தேதி பிறந்தவர் மாயத்தேவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் படித்த அவர், அதன்பின்னர் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் படித்துள்ளார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த இவர் எம்.ஏ. பி.எல் பட்டம் பெற்று சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய போதே எம்.ஜி.ஆர் மீது தீவிர பக்தி கொண்டவராக இருந்தார்.
1973ம் வருடம் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய போது திண்டுக்கல்லில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பாகப் போட்டியிட்டார். அப்போது தேர்தல் சின்னத்தைத் தேர்வு செய்யும்போது இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்து அதை எம்.ஜி. ஆருக்கு தெரிவித்து அதே சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றவர். அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. வில் இருந்தவர் ஒரு சில காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். அப்போதும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார். அதன்பின்னர் கடந்த 15 வருடங்களாக அரசியலை விட்டு விலகி இருந்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் இருந்து வந்த மாயத்தேவர் திடீரென காலமானார். இறந்துபோன மாயத்தேவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், கே.எம்.வெங்கடேசன், கே.எம்.சுமதி, கே.எம். செந்தில்குமரன் என்ற மகன்கள் மற்றும் மகள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகன் கே.எம்.வெங்கடேசன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார். தற்போது மாயத்தேவர் வடக்குத் தெருவில் தேவர் சிலை அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது நல்லடக்கம் நாளை புதன்கிழமை மதியம் நடைபெறுகிறது. மறைந்து போன முன்னாள் எம்.பி.மாயத்தேவர் இந்தியப் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் அவர்களால் பாராட்டு பெற்றவர். அதுபோல தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்து வந்தார். தற்போது அதிமுக பொருளாளராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் மாயத்தேவரின் உதவியாளராக இருந்து வந்தவர். உடல்நலக்குறைவால் காலமான மாயாதேவருக்கு தொகுதி எம்எல்ஏ வும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அதேபோல் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்த அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாயத்தேவருக்கு கட்சி பாகுபாடு இன்றி இறுதி அஞ்சலி செலுத்தினர் வருகிறார்கள். இன்று எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்த வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.