![Mask Mandatory ... TNPSC Announcement!](http://image.nakkheeran.in/cdn/farfuture/GzDlVF61XdUE1rVadc6qNwdSYbkL0Wl5nN2gCtpNj2A/1652270237/sites/default/files/inline-images/Z1_3.jpg)
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வு எழுத வருவோர் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலியிடங்களையும், நேர்காணல் இல்லாத குரூப் 2ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான முதல்நிலைத் தேர்வு இந்த மாதம் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்வர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணிந்தவர்களே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதிகாரிகள் சோதனை செய்ய வரும்பொழுது முகக்கவசத்தை அகற்ற வேண்டும். அதேபோல் ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை தேர்வர்கள் அணிந்து வரக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.