இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா , மிசோரம் ஆகிய 5 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதேபோல கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முகக்கவசம் அணிவது கட்டாயம். அதே நேரத்தில் அபராதமில்லை. அபராதம் விதிக்கப்படுவதில்தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும். அபராதம் விதித்தால்தான் அணிவோம் என்ற மனநிலைக்கு மக்கள் வரக்கூடாது" எனத் தெரிவித்தார்.