புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்காடு வடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்கி என்ற இளைஞர் தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக கஸ்தூரி புகார் அளித்திருந்தார். இந்நிலையில், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் திருமணம் செய்ய மறுத்ததால் வன்கொடுமை வழக்கில் ராம்கி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் காதலி கஸ்தூரியை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து அதன் அடிப்படையில் பிணை பெற்றவர், திருமணம் செய்துகொள்ளாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை உயர் நீதிமன்றம் வரை சென்றும் ஜாமீன் கிடைக்காததால், புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்த ராம்கி, தனது காதலியைத் திருமணம் செய்துகொள்வதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதி அப்துல் காதர் அனுமதியுடன் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் ராம்கி - கஸ்தூரி திருமணம் நடைபெற்றது. அதன் பின்பு ராம்கியை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து மதுரை உயர் நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.