செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல்லில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நியூ இந்திய அஷுரன்ஸ் கம்பெனி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை நீதிபதி எஸ். வைத்தியநாதன் விசாரித்தார். வாகனத்திற்கான ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வாகனத்துக்கு காப்பீடு எடுக்கப்பட்டதாகவும், ஓட்டுநர் அல்லாத ஒருவர் இறப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியுமென காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது. சடையப்பன் வாகன ஓட்டுநராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், விபத்து நடந்தபோது அவர் வாகனத்தை இயக்கவில்லை என்றும், அவர் சம்பளம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றை ஏற்றுக்கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேசமயம் புதிய வாகனத்தை வாங்கும்போது அது எவ்வாறு செயல்படும் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், காப்பீடு நடைமுறைகளை முழுமையாக தெரிந்துகொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் வாங்குபவர்களுக்கு காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிவிப்பதில்லை என்று விற்பனையாளர்களைக் குற்றம்சாட்டியுள்ளார். வரும் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுநனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.