சென்னையை அடுத்த, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகள் வனச் சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பூங்காவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனிடையே பூங்கா பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 76 பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பூங்காவை இன்று (16-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை மூட பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் பிறகு நிலைமையைப் பொறுத்து, பூங்காவைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், வண்டலூர் பூங்காவில் 5 வயதான விஷ்ணு என்ற ஆண் சிங்கம் நேற்று திடீரென உயிரிழந்தது. உணவு குழாயில் ஏற்பட்ட முறிவு காரணமாகவும் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாகவும் சிங்கம் உயிரிழந்ததாகத் தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கரோனா உறுதி செய்யப்பட்ட ஒன்பது சிங்கங்களில் நீலா, பத்மநாபன் எனும் இரு சிங்கங்கள் ஏற்கனவே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.