ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக கொடுத்தனர். ஈரோடு அரசு மினி கிளினிக்கில் பணியாற்றும் மருத்துவர்கள் சிலர் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
பிறகு அவர்கள் கூறும்போது, “கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போது அரசு சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முக்கியமாக மருத்துவ சேவைகள் தேவைப்பட்ட நிலையில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில், மருத்துவர்கள் பணி நியமனம் ஒப்பந்த அடிப்படையிலும் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் நடைபெற்றன.
ஆனால், அரசு மினி கிளினிக் மருத்துவர்களாகிய நாங்கள் நீதிமன்ற வழிகாட்டுதல்படி தமிழக அரசின் ஆணைக்கு இணங்க ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் துணை இயக்குநர் (சுகாதாரம்), மாவட்ட இணை இயக்குனர் மூலமாக நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டோம். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களில் 70 சதவீதம் பேர் கரோனா முதல் அலையின் போது தடுப்பு பணியில் சிறப்பு மருத்துவராக 6 மாதம் முதல் 9 மாதம் வரை பணியாற்றி உள்ளோம். அதன்பின் மினி கிளினிக்கில் இரண்டு மாதங்கள் பணியாற்றினோம் எங்களில் பலர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களிலும் பணியாற்றினோம்.
தற்போது ஆறு மாத காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு, கரோனா கவனிப்பு மையம், தடுப்பூசி முகாம், காய்ச்சல் கணக்கெடுப்பு, கரோனா கட்டுப்பாட்டு அறை உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறோம். மேலும் தற்போது டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இந்த கரோனா பேரிடர் காலத்தில் மருத்துவராகிய நாங்கள் தமிழக அரசுடன் இணைந்து இரவு பகல் பாராமல் குடும்ப உறுப்பினர்களையும் பாராமல் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வந்துள்ளோம். எங்களில் பலர் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம். இந்த சேவையை நாங்கள் முழு மனதோடு செய்துவருகிறோம். ஆகவே, எங்களைப் போன்ற ஒப்பந்த முறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களை காலிப்பணியிடங்களில் நிரப்பி தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து தர வேண்டும்” என்றனர்.