நாகை வனத்துறை அலுவலகத்தில் 400 கிலோ கடல் அட்டை மாயமாகியுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
நாகப்பட்டினம் வனத்துறையினர் கடந்த 2020ம் ஆண்டு அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட கடற் பொருளான கடல் அட்டை 1060 கிலோ கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்திருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகப்பட்டினம் மகாலட்சுமி நகரில் உள்ள வன உயிரின பாதுகாவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன் நீதிமன்ற நடவடிக்கைக்காக மீண்டும் கடல் அட்டை இருப்பு குறித்து வனச்சரகர் அனந்தீஸ்வரன் சோதனை செய்துள்ளார். அப்பொழுது 1060 கிலோ கடல் அட்டையில் 400 கிலோ கடல் அட்டை மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து வனச்சரகர் அனந்தீஸ்வரர் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் அளித்த அதே நேரம் வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றிய நாகப்பட்டினம் காடம்பாடி பகுதியைச் சேர்ந்த தற்காலிக ஊழியரான கோவிந்தராஜ் என்பவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வெளிப்பாளையம் போலீசார் தலைமறைவான கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.