![Maduravayal-Port Road project to be revived!](http://image.nakkheeran.in/cdn/farfuture/L_qHLG7Yn6HkfxBSWUFWkmY-X6OYlPlTNI-16CmCOuw/1652705092/sites/default/files/inline-images/cm3232323_0.jpg)
சென்னையில் மதுரவாயல், துறைமுகம் இடையிலான இரண்டடுக்கு சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (16/05/2022) தலைமைச் செயலகத்தில், சென்னை துறைமுகம் அவர்கள் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தானது.
இத்திட்டத்தின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூபாய் 5,855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
இந்த இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில், சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும் / இறங்கும் சாய் தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் காரணமாக, நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் நிலுவையிலிருந்த இப்பணியினை செயல்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகிய துறையினரால் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் டாக்டர் வி.கே. சிங், தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால், இ.ஆ.ப., தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முதன்மை பொது மேலாளர் பி.ஜி. கோடாஸ்கர், மண்டல அலுவலர் எஸ்.பி. சோமசேகர், தேசிய நெடுஞ்சாலைகள் முதன்மை பொறியாளர் பாலமுருகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேவல் ஏரியா ஃபிளாக் ஆபீசர் கமாண்டிங் ரியர் அட்மிரல் புனித் சதா, நேவல் ஆபீசர் பொறுப்பு கமாண்டர் எஸ். ராகவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்." இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.