‘காவல்துறை எச்சரிக்கை! நோட்டீஸ் ஒட்டக்கூடாது! அச்சு பதிக்கக்கூடாது!’ என்ற வாசகங்களை அரசு சுவர்களிலும், பாலங்களிலும், தூண்களிலும் பார்க்கிறோம். அந்த எச்சரிக்கையை, சம்பந்தப்பட்ட யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்குச் சான்றாக, அன்றாடம் நம் கண்ணில்படும் சுவரொட்டிகள் உள்ளன. ஒருவழிப்பாதை என்பதைக் காட்டும் குறியீடுகளும்கூட, சுவரொட்டிகளால் மறைக்கப்படுகின்றன.
‘சிறிதும் சிந்திக்காமல், எச்சரிக்கை பலகைகளில்கூட போஸ்டர் ஒட்டுகின்றனர். இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?’ என ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
சென்னையில், மெட்ரோ ரயில் திட்ட வளாகங்கள், கட்டுமானங்களில் அனுமதியின்றி போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டினால் ஆறு மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்ததும் நடந்தது. தூய்மையைப் பராமரிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24,384 இடங்களில் 1,00,420 சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் கிழிக்கவும் செய்தனர்.
மதுரை உட்பட, தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளில் மத்திய அரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.345 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் வாயிலாக, மதுரை நகரம் சீர்மிகு நகரமாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனாலும், அரசு செலவில் பாலங்களில் பெயின்ட் அடிக்கும் பணி ஒருபுறம் நடந்தாலும், இன்னொருபுறம் போஸ்டர்கள் கன்னாபின்னாவென்று ஒட்டப்படுகின்றன. விதிமீறலாகச் சுவர் விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுகின்றன. விதிமீறலாகப் போஸ்டர் ஒட்டுவோருக்கு, அதிகபட்சம் 3 மாத சிறை அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கமுடியும். வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையோ வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.
சட்டம் ஏட்டில் மட்டுமே இருப்பதால் யாருக்கென்ன பயன்?