
மதுரையில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்தி வந்த 100 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, கார் ஓட்டுநரையும் கைது செய்தனர்.
மதுரையில் இருந்து சேலத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி. முரளி, ஆய்வாளர் ரவிகுமார் மற்றும் காவல்துறையினர் சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு காரை தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். காரில் இருந்து 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கார் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தபோது, மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த அபினேஷ் (வயது 25) என்பதும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது. பிடிபட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு 25 லட்சம் ரூபாய் என்கிறது காவல்துறை. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபினேஷை கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.