ஆண்டிப்பட்டி அருகே மதுரையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் திம்மரசநாயக்கனூர் பகுதியில், மதுரை-தேனி சாலையோரம் கழுத்து அறுக்கப்பட்டு, பின் இடுப்பில் கத்தி குத்திய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்துவந்த ஆண்டிப்பட்டி போலீசார் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து, போலீசார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், இறந்தவர் மதுரை மேலப் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் நாகு என்ற நாகேந்திரன் என்பது தெரியவந்தது. இறந்தவர் ரியல் எஸ்டேட் மற்றும் ஃபைனான்ஸ் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நேற்று முன்தினம் நாகேந்திரனின் மனைவி இளவரசி மற்றும் அவரது மகன் ஆகியோர் உறவினர் விஷேசத்திற்காக திருச்சிக்கு சென்றுவிட்டதாகவும், வீட்டில் இருந்த நாகேந்திரனை மர்ம நபர்கள் காரில் கடத்தி வந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்து சாலையில் வீசிவிட்டுச் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் நாகேந்திரனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர் நாகேந்திரனை கொலை செய்த மர்ம நபர்களைப் பிடிக்க, ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணதேவந்திரன், கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்ஷா ஆகியோர் தலைமையில் தலா 4 போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தனிப்படை போலீசார் மதுரை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், மதுரை மேலப்பொன்னகரம், பெத்தானியாபுரம் பகுதிகளில் உள்ள சில சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில், சம்பந்தபட்ட மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.